Monday, 31 August 2020

தனிஷ்டா பஞ்சமி( அடைப்பு)

 தனிஷ்டா  பஞ்சமி( அடைப்பு)

தனிஷ்டா என்றால் அவிட்டம் என்று பொருள், தனிஷ்டா பஞ்சமி என்றால் அவிட்டம் முதல் வரிசையாக வரும் ஐந்து நட்சத்திரங்களையே  "தனிஷ்டா பஞ்சமி" என்று சொல்லப்படுகிறது....

அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால் அது தனிஷ்டா பஞ்சமி எனப்படும் அடைப்பு ஆகும்.

இதை வசு பஞ்சக தோஷம் என்று வடமாநிலங்களில்  கூறுகிறார்கள். இறந்த ஆத்மாக்கள் மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையே அடைப்பு எனப்படுகிறது. மேற்கண்ட 5 நட்சத்திரங்கள் நடப்பில் உள்ள நாளில் ஒரு குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால் ஒரு வருடத்திற்கு அதே குடும்பத்தில் தொடர் மரணங்கள் ஏற்படும் அல்லது மரணத்திற்கு சமமான கண்டங்கள் ஏற்படலாம். குறிப்பாகக் கொள்ளி வைத்தவருக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தத் தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இறந்தவரைச் சூரியன் 🌞 மறைவதற்கு முன்பு தகனம் செய்து விட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் இரவில் பிணத்தை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. 

அந்தப் பிணத்தைத் தகனம் செய்யும்போது தர்ப்பை, அருகம்புல் ஆகியவற்றால் 5 பொம்மைகள் செய்து கொள்ளி வைத்தவர் கைகளால் எரித்து விட வேண்டும். ( சில ஊர்களில் கோழி குஞ்சுகளை உயிருடன் பிணத்துடன் சேர்த்து புதைப்பதுண்டு).

மரணம் ஏற்பட்ட 16 ஆம் நாள் கழித்து வீட்டில் "மிருத்யுஞ்சய ஹோமம்" செய்ய வேண்டும். கொள்ளி வைத்தவர் அந்த வருடம் முடிவதற்குள் தனது நட்சத்திரம் வரும் நாளில் கடல், நதி, அல்லது குளக்கரை சென்று சிவ பூஜை செய்ய வேண்டும்.

மேலே உள்ளவையே தனிஷ்டா பஞ்சமி எனப்படும். இது மட்டுமில்லாமல் மேலும் சில நட்சத்திரங்களும் தோஷத்தை தருகின்றன. இது மட்டுமில்லாமல் ரோகிணி நட்சத்திரத்தில் இறந்தால் 4 மாதம்வரை தோஷம் என்றும், கார்த்திகை, உத்திரம் நட்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் இறந்தால் அது பிண்ட நூல் தோஷம் எனப்படும். இது 3 மாதம் தோஷம் ஆகும். மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உட்திராடம், அஷ்டமி, நவமி, சதுர்த்தி, சதுர்த்தசி திதி ஆகிய   நாளில் மரணம் ஏற்பட்டால் அது "பலி" நட்சத்திர தோஷம் எனப்படும். இது 2 மாதம் தோஷம் ஆகும்.

இதற்குப் பரிகாரமாக இந்த நட்சத்திரத்தில் இறந்தால் இறந்தவர் இருந்த வீடு மூடப்பட வேண்டும் அல்லது இறந்தவர் உபயோகித்த பொருள்களை ஒரு ரூமிலோ, ஒரு பெட்டியிலோ போட்டுப் பூட்டி வைத்து மேலே குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்.

வெண்கல கிண்ணத்தில் நல்லெண்ணெய் விட்டுத் தீபம் ஏற்றி வரவும். பின்பு வெண்கல கிண்ணத்தை தானஞ் செய்து விடவும்.

இறந்தவரை எடுக்கும்போது  குளிகைகாலம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

இறந்தவர்களுக்குத் தீட்டு அனுசரிக்கும் விஷயத்தில். தாய், தந்தை இறந்தால் 1 வருஷம் முடியும் வரையிலும், மனைவி இறந்தால் 3 மாதம் வரையிலும், சகோதரன் இறந்தால்  45 நாட்களும், பங்காளிகள் இறந்தால், இறந்த 30 ஆம் நாள் முப்பது கும்பிடுவது என்று இறந்தவருக்குப் படையல் வைத்து வணங்குவார்கள் அதாவது ஒரு மாதம் தோஷம்...! 

No comments:

Post a Comment